×

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் 2வது சுற்றில் கெர்பர்: மர்ரே முன்னேற்றம்

சின்சினாட்டி: அமெரிக்காவில் நடைபெறும் வெஸ்டர்ன் மற்றும் சதர்ன் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் தகுதி பெற்றார். முதல் சுற்றில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்கரியுடன் மோதிய கெர்பர் அதிரடியாக விளையாடி 6-2, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். இப்போட்டி 1 மணிம் 9 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. முன்னாள் நம்பர் 1 வீராங்கனையான கெர்பர், சின்சினாட்டி ஓபனில் 2 முறை இறுதிப் போட்டி வரை முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது. மற்றொரு முதல் சுற்றில் செக் குடியரசின் பெத்ரா குவித்தோவா - மேடிசன் கீஸ் (அமெரிக்கா) மோதினர்.

விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் குவித்தோவா 7-5, 6-4 என்ற நேர் செட்களில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். உள்ளூர் வீராங்கனைகள் ஜெனிபர் பிராடி, அலிசான் ரிஸ்கி, ஷெல்பி ரோஜர்ஸ் ஆகியோரும் 2வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். இதே தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் களமிறங்கிய இங்கிலாந்து நட்சத்திரம் ஆண்டி மர்ரே 6-4, 6-4 என்ற நேர் செட்களில் ரிச்சர்ட் கேஸ்கேவை வீழ்த்தினார். இப்போட்டி 1 மணி, 50 நிமிடத்துக்கு நீடித்தது. முன்னணி வீரர்கள் பேபியோ பாக்னினி, ஜானிக் சின்னர் (இத்தாலி), டீகோ ஸ்வாட்ர்ஸ்மேன், குய்டோ பெல்லா (அர்ஜென்டினா) ஆகியோரும் 2வது சுற்றில் நுழைந்துள்ளனர்.


Tags : Gerber ,Cincinnati Open Tennis ,Murray , Gerber in the 2nd round of the Cincinnati Open Tennis: Murray progress
× RELATED 2வது சுற்றில் ஸ்வியாடெக் மர்ரேவை வீழ்த்தினார் வாவ்ரிங்கா